வென்றேந்திய விறற்படையோன் முன்றேர்க்க ணணங்காடின்று. (இ - ள்.) வென்றெடுத்த வெற்றியான் மிக்க ஆயுதத்தையுடையான் தேரின்முன் பேயாடியது எ-று. (வ - று.) உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று புலவாய புன்றலைப்பே யாடும்-கலவா அரசதிர நூறி யடுகளம் வேட்டான் முரசதிர வென்றதேர் முன். (இ - ள்.) கெடாத நன்மையினைச் செய்தவன் நெடுங்காலம் வாழ்வானாகவெனச் சொல்லிப் புலால்நாறும் வாயினையும் புற்கென்ற தலையினையுமுடைய பேய் கூத்தாடும்;பொருந்தாத மன்னர் நடுங்கவெட்டிக்கள வேள்வி வேட்டான் முரசுமுழங்க வென்ற தேரின்முன்பு எ-று. முன் பேயாடும். (7) |