கான்மலியு நறுந்தெரியற் கழல்வேந்த ரிகலவிக்கும் 1நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத்தன்று. (இ - ள்.) செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர் மாறுபாட்டைக்கெடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன் நன்மைமிக்க செப்பமுறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - 2செல்லலும் வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை என்றன்றி மீண்ட திலர் . (இ - ள்.) அநுகரண ஓசையையுடைய கடல்சூழ்ந்த வையகத்து அறிவு சாலச் சீரிதாகவிருந்தது; அழகிய புகழினையும் மூன்று செந்தீயினையும் நான்கு வேதத்தினையுமுடையோன் சந்துவேண்டிச் சென்றானாகப் பகைமேல் எடுத்துச் சென்றால் வென்றல்லது மீளாத வெற்றி மன்னர் வெய்யமுரணென்றல்லது பொருந்தி மீண்டதிலர் எ-று. (18)
1. புநநா. 305 : 2 . 2. செல்லவும் |