175. 1மூதின் முல்லை
அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று.

(இ - ள்.) கொல்லும் வேலினையுடைய வீரர்க்கல்லது அந்த மறக்குடியில் மடப்பத்தினையுடைய அரிவைமார்க்கும் சினத்தைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து
வெந்திற லெஃக2மிறைக்கொளீஇ - முந்தை
முதல்வர்கற் றான்காட்டி 3மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு .

(இ - ள்.) தங்கள்மேல் எடுத்துவந்த சேனையைப் பொறாளாய்ப் பிள்ளை வாயின் முலையை வாங்கி வெவ்விய வெற்றியினையுடைய வேலை முன்பு பகைவரைக் குத்திவளைந்த வளைவுதவிர்த்து முன்பு தன்வழியினுள்ளோர் நடுகல்லைத் தான் அவனுக்குக்காட்டிப் பழையமறக்குடியிற் பேதையானவள் பூசலுக்குப் போவாயாகவென்று சொன்னாள் எ-று.

இறைக்கொளீஇ - கையிலே கொடுத்தென்றுமாம்.

(21)

1. தொல். புறத். சூ. 4, இளம். வி.
2. புறநா. 284 : 6-7, அடிக்.
3. புறநா. 19 : 15; 279 :2.