177. வல்லாண் முல்லை
1இல்லும் பதியு மியல்புங் கூறி
2நல்லாண் மையை நலமிகுத் தன்று.

(இ - ள்.) இல்லையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அழகிய ஆண்மைத் தன்மையை நன்மை்பெருகச் சொல்லியது எ-று.

(வ - று.)
வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார்
முன்முன் முயலுகளு முன்றிற்றே - மன்முன்
வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி
உரைமாலை சூடினா னூர் .

(இ - ள்.) வில்லின்முன்னே அம்பையாராயும் வேட்டையாடும் சிறு பிள்ளைகள் முன்னே முன்னே முயல் பாயும் இல்முன்னையுடைத்து; அரசனுடையமுன் மலைபோன்ற அகலத்துள் எஃகம் அழுந்த வாட்போரைத் தடுத்துக் கீர்த்தித்தெரியலைப் புனைந்தவன் பதி எ-று.

பதி முன்முன் முயலுகளும் முன்றிற்றென்க.

(23)

1. புறநா. 170, உரை, மேற்.
2. நல்லாண்மைநலம்