181. மறமுல்லை
1வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும்
கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று .

(இ - ள்.) தெளிந்தவாளினையுடைய மன்னன் விரும்பியது கொடுப்பவும் அதனைக்கொள்ளாத வீரனது கனற்சியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
வின்னவி றோளானும் வேண்டிய கொள்கென்னும்
கன்னவி றிண்டோட் கழலானும் - மன்னன்முன்
ஒன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
நின்றா னெடிய மொழிந்து .

(இ - ள்.) சிலைகெழுமிய புயத்தினையுடைய அரசனும் விரும்பினவற்றை நீ கொள்கவென்று சொல்லாநிற்கும்; மலைபொருந்தின திண்ணிய புயத்தினையுடைய கழல்வீரனும் அரசன்முன் பொருந்தானாகி அழலாக நோக்கா ஒள்ளிய நாந்தகத்தை மிசையேயெடுத்து வாளாது நின்றான் , உயர்ந்தவார்த்தை பலவுஞ் சொல்லி எ-று.

(27)

1. பு-வெ. 184, 195.