186. கிணைநிலை
1தண்பணை வயலுழவனைத்
தெண்கிணைவன் றிருந்துபுகழ்கிளந்தன்று.

(இ - ள்.) மருதநிலத்திற் கழனியிடத்து வேளாளனைத் தெளிந்த கிணை கொட்டுமவன் நல்ல கீர்த்தியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
பகடுவாழ் கென்று பனிவயலு 2ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர் .

(இ - ள்.) ஏர்வாழ்கவென்று சொல்லிக் குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறுபோன்ற அழகிய கண்ணினையுடைய கிணையை மாசைத்துடைத்துக் குன்றையொக்கும் 3நெற்போர்வினையுடைய உபகாரி தன் செல்வத்தை வாழ்த்த இன்று நீங்கும் , எங்கட்கு மிடி எ-று.

(32)

1. சிலப். 10 : 138 - 9 , அடியார். மேற். பகடு-ஏர்; நாலடி. 2.
2. பு-வெ. 206; அகநா. 356 : 2-4; புறநா. 70 : 2-3; 249 : 4.
3. நெற்போர் விளக்கத்தை