187. பொருளொடு புகறல்
வையகத்து விழைவறுத்து
மெய்யாய பொருணயந்தன்று.

(இ - ள்.) பூமியிடத்துப் பற்றாய விருப்பத்தினை ஒழித்து மெய்ம்மையான பொருளை விரும்பியது எ-று.

(வ - று.)
ஆமினி மூப்பு மகன்ற திளமையும்
1தாமினி நோயுந் தலைவரும் - யாமினி
மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த
ஐயைந்து மாய்வ தறிவு .

(இ - ள்.) இனி மூப்பும் ஆம்; கழிந்தது இளமையும்; நோய்தாமும் இனிமேல் வரும்; யாம் இப்போது சரீரத்திற் பஞ்சேந்திரியங்கள் அடரத்தங்காது தலைவந்த பஞ்சவிருத்தியைத் தெரியுமது நல்லறிவு எ-று.

ஐயைந்தாவன : மெய்ம்முதலான ஞானேந்திரியங்கள் ஐந்தும் , பூமி முதலான மகாபூதங்கள் ஐந்தும் , சுவைமுதலான தன்மாத்திரைகள் ஐந்தும் , வாக்குமுதலான கன்மேந்திரியங்கள் ஐந்தும் , மனமுதலான அந்தக்கரணம் நான்கும் சீவனுமாகிய ஐந்தும்.

(33)

1. சீவக. 247, ந. மேற்.