188. அருளொடு நீங்கல்
1ஒலிகடல் வையகத்து
நலிவுகண்டு நயப்பவிந்தன்று.

(இ - ள்.) முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றை ஒழிந்தது எ-று.

(வ - று.)
கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை
இயக்கிய யாக்கை யிறாமுன்-மயக்கிய
பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை
உட்படாம் போத லுறும்.

(இ - ள்.) கலக்கிய நோவுகளையுடையவாய்க் கைகடந்து நம்மை நடத்திய சரீரம் ஒடிவதற்கு முன்னே மருளப் பண்ணின குணம் அடுத்துத் தங்கும் பயத்தையுடைய உலகமாகிய நீண்ட கண்ணியுள்ளே அகப்படாமாகி நன்னெறிக்கட் சேர்தல் உறுதியுடைத்து.

பண்பு: பட்பென விகாரமாயிற்று.

(34)

1. மாறன். ப. 42, மேற்.