189. பாடாண் பாட்டு
1ஒளிவு மாற்றலு மோம்பா வீகையும்
அளியு மென்றிவை யாய்ந்துரைத் தன்று.

(இ - ள்.) இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும் தண்ணளியும் என்று சொல்லுமிவற்றைத் தெரிந்து சொல்லியது எ-று.

(வ - று.)
2மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை
அன்ன நடையினார்க் காரமுதம்- துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேற் றானையெங் கோ.

(இ - ள்.) அரசர்பலர்க்கும் சிங்கம், அந்தணர்க்குப் புகழ்மாலை, அன்னம்போன்ற செலவினையுடைய மகளிர்க்கு நிறைந்த அமிர்தம், செறியும் இரவலர்க்கு மழை, குளிர்ந்த பூவாற்செய்த செவ்விமாலையினையும் அழலும் சினவேற் சேனையினையுமுடைய எம்முடைய அரசன் எ-று.

(1)

1. ஒளி: குறள். 390, 556, 698; புறநா. 51, 309; சீவக. 248; மணி. 29: 128.
2. நன் .சூ. 409, மயிலை. மேற். மாறன். ப. 192, மேற்.