19. துடிநிலை
தொடுகழன் மறவர் தொல்குடி மரபிற்
படுக ணிமிழ்துடிப் பண்புரைத் தன்று.

(இ - ள்.) கட்டும் கழல்வீரர் பழங்குடி முறைமையில், மிக்க கண்ணினையுடைத்தாய் ஒலிக்கும் துடியைக் கொட்டுமவன் குணத்தைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர்
எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு - வந்த
குடியொடு கோடா மரபினோற் கின்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.

(இ - ள்.) என் பாட்டனுடைய பாட்டன் முதலாயினார்க்குத் துடிகொட்டினார் இவன் பாட்டனுடைய பாட்டன் முதலாயினார்; என் தமப்பனுக்கு இவன் தமப்பன் துடிகொட்டினான்; இவன் எனக்குத் துடி கொட்டுவான்; வழிவந்த குடிமுறைமையோடு பிறழாத முறைமையினையுடையவனுக்கு இன்னமும் வடித்தலுற்ற தித்தித்த மதுவினது தெளிவை வார்ப்பாயாக எ-று.

(19)

1. இவற் கீத்துண்மதி (புறநா. 290) என்பது இதனை ஒத்துள்ளது. தொல். புறத். சூ. 4, இளம். மேற்.