190. வாயினிலை
புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை
கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று.

(இ - ள்.) அரசனுடைய நெடிய வாயிலைக் கிட்டிய என்வரவினை மறைவின்றிச் சொல்லென வாயில்காவலனுக்குச் சொல்லியது எ-று.

(வ - று.)
நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
ஈட்டிய சொல்லா னிவனென்று - காட்டிய
காயலோங் கெஃகிமைக்குங் கண்ணார் கொடிமதில்
வாயிலோய் வாயி விசை.

(இ - ள்.) பூமியின்கண் நிறுத்திய மெய்ம்மொழியினையுடைய நாவாற் சீர்சிறந்த அறிவினையுடையோர் புகழ்ந்த நல்ல புகழைப்பாடிய சொல்லினையுடையவனிவனென்று சொல்லி என்னைக் காட்டுவான் வேண்டிச் சத்துருக்களைச் செறுதற்றொழிலுயர்ந்த வேலிலங்கும் கண்ணுக்கு நிறைந்த பதாகையாற் பொலிந்த புரிசையின் வாயிலிடத்துக் காவலாளனே, நான் வந்த வரலாற்றைச் சொல்லுவாயாக எ - று.

(2)