194. இயன்மொழி வாழ்த்து
இன்னோ ரின்னவை கொடுத்தார் நீயும்
அன்னோர் போல வமையெமக் கீகென
என்னோரு மறிய வெடுத்துரைத் தன்று.

(இ - ள்.) இத்தன்மையோர் இத்தன்மை வழங்கினார், நீயும் அத்தன்மையோர்போல் அப்படியான பொருள்களை எமக்குத் தருவாயாகவென்று சொல்லி எத்தன்மையோரும் உணர உயர்த்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
1முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாம லீந்த 2விறைவர்போ னீயும்
கரவாம லீகை கடன்.

(இ - ள்.) முல்லைக்குப் பொற்றேரும் மயிலுக்கு மணிப்படாமும் எல்லை கடலாகவுடைய வையகத்துக் கீர்த்திவிளங்க முற்காலத்து வேண்டாமே கொடுத்த உபகாரிகளை யொப்ப நீயும் ஒளியாது வழங்கல் கடன் எ-று.

(6)

1. பழ. 361.
2. இறைவர் : பாரி, பேகனென்பார்; சிறுபாண். 84-91; புறநா. 200, 201, 141, 145.