196. கண்படைநிலை
நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று.

(இ - ள்.) உயரிய தேரான் மிக்க பகைவர்சேனை பொடிபடச் சொல்லும் கடுந்தேரினையுடைய வேந்தனது துயிலை மிகுத்தது எ-று.

(வ - று.)
1மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென் றடக்கிக் - கோலாற்
கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன்
கடியத் துயிலேற்ற கண்.

(இ - ள்.) வீரர் தங்கிய போரிடத்து ஒளிநிறைந்து செற்றம்பொழியா நிற்கும் வேலாலே வலியபூசலைச் சயித்து ஒடுக்கிச் செங்கோனீதியாற் கொடியவை பூமியிடத்துக் கிட்டாமை எம்முடைய அரசன் நீக்குதலான் உறக்கத்தை மேவின, விழிகள் எ - று.

(8)

1. தொல். புறத். சூ. 29, இளம். மேற்