198. மங்கலநிலை
கங்குற் கனைதுயி லெழுந்தோன் முன்னர்
மங்கலங் கூறிய மலிவுரைத் தன்று.

(இ - ள்.) கங்குலிடத்து மிக்க உறக்கத்தை நீங்கினோன் முன்னே மங்கலத்தைச் சொன்ன மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டின் கை்கூப்பன் மங்கலம் - பெண்வேண்டின்
துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்
மன்னன் வரைபுரையு மார்பு.

(இ - ள்.) சுவர்க்கத்தை விரும்பின் வேறுபடுதல் ஆக்கம்; மண்ணாள வேண்டின் கைகுவித்தல் ஆக்கம் அரசர்க்கு; பெண்மைத் தன்மையை விரும்பின் அணையுமது பேதையர்க்கு ஆக்கும், தோல்வியறியாத பூசலையுடைய வேந்தன்றன் வரைபோன்ற அகலத்தை எ - று.

(10)