அந்தமில் புகழா னமரரு மகிழச் செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று. (இ - ள்.) முடிவில்லாத கீர்த்தியையுடையான் தேவர்களும் மனமகிழயாகம்பண்ணின தலைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) கேள்வி மறையோர் கிளைமகிழ்த லென்வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் றான்வேட்ப - நீள்விசும்பின் ஈர்ந்தா ரிமையோரு மெய்தி யழல்வாயால் ஆர்ந்தார் முறையா லவி. (இ - ள்.) கேள்வியினையுடைய வேதியர்சுற்றம் உவத்தல் என்ன அதிசயமாம்? யாகத்தை வென்றிமன்னன் தான்விரும்ப உயர்ந்த சுவர்க்கத்தின் ஈரத்தாற் சிறந்த மாலையினையுடையதேவர்களும் கிட்டி அழலாகிய வாயாலே அருந்தினார், முறையாலே அவியை எ-று. எவனென்பது என்னெனக் குறைந்துநின்றது. (15) |