204. வெள்ளிநிலை
துயர்தீர்ப் புயறருமென
உயர்வெள்ளி நிலையுரைத் தன்று.

(இ - ள்.) இடரொழிய மழையைத் தருமெனச் சொல்லி உயர்ந்த வெள்ளியினது நிலைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
சூழ்கதிர் வான்விளங்கும் வெள்ளி சுடர்விரியத்
தாழ்புயல் வெள்ளந் தருமரோ - சூழ்புரவித்
தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்கு வேலோய்நின்
1மார்விற்றார் கோலி மழை .

(இ - ள்.) சந்திராதித்தர் வலமாக இயங்கும் ஆகாயத்தினை விளங்கப் பண்ணாநிற்கும் வெள்ளியானகோள் ஒளி பரக்க, அதனாற் கால்விழுந்த மேகம் மழைவெள்ளத்தைத் தரும்; தெரிந்த குதிரையாற் பூட்டப்பட்ட தேரின்மேல் வில்லையுடைய படையைத்தடுத்து மிக்கு விளங்கும் வேலினையுடையோய் , நின்னுடைய அகலத்தின் மாலைபோல நீர்த்தாரை கோலி எ-று.

(16)

1. "மார்விற்றிருவிற் பொலிமாலையினான் " (கம்ப. சரபங்க. 9.)