208. வீற்றினிதிருந்த பெருமங்கலம்
கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறன்மிகுத்தன்று.

(இ - ள்.) காலன் குடியிருந்த கொலைத்தொழிலையுடைய வேலான் செம்மாந்திருந்த வெற்றியைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
அழலவிர் பைங்க ணரிமா னமளி
நிழலவிர்பூண் மன்னர்நின் றேத்தக் - கழல்புனைந்து
வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப்
பூமலி நாவற் பொழிற்கு.

(இ - ள்.) தழலொளிரும் பசுங்கண்ணினாற் சிறந்த சிங்கம் சுமந்த அணைமேலே நிழலிலங்கும் ஆபரணத்தினையுடைய மன்னர் நின்று வாழ்த்த வீரக்கழலினைக் கட்டி மலர்மிக்க மாலைவேந்தனாகிச் செம்மாந்திருந்தான், மிகும் ஒலிக்கடலையுடைத்தாய்ப் பொலிவு நிறைந்த நாவலத்தீவிற்கு எ-று.

(20)