இகலடுதோ ளெறிவேன் மன்னன் மகளிரொடு மணந்த மங்கலங் கூறின்று. (இ - ள்.) பகையைக் கொல்லும் புயத்தினையும் எறியும் வேலினையுமுடைய வேந்தன் அரிவையரோடு புணர்ந்த நன்மையைச் சொல்லியது எ-று. (வ - று.) அணக்கருந் தானையா னல்லியந்தார் தோய்ந்தோள் மணக்கோல மங்கலம்யாம் பாட - வணக்கருஞ்சீர் ஆரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட் கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி. (இ - ள்.) பகைவரான் வருத்துதற்குரிய சேனையினையுடையான்றன் அல்லிமாலையை மணந்தாள், வதுவையணிப்பொலிவை யாங்கள் புகழ; தாழப்பண்ணுதற்கரிய மதிப்பினையும் நிறைந்த அரணினையுமுடைய வேந்தன்றன் பேதையாகிய அழகிய மூங்கில்போன்ற தோளினையும் கூரிய பல்லினையும் சிவந்த வாயினையுமுடைய காமவல்லியனையாள் எ-று. (22) |