வேல்வேந்த னுண்மகிழப் பாலன் பிறப்பப் பலர்புகழ்ந் தன்று. (இ - ள்.) வேலினையுடைய மன்னன் மனமுவப்பப் புதல்வன் பிறத்தலாற் பலரும் கொண்டாடியது எ-று. (வ - று.) கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப் பெருங்கட் புதல்வன் பிறப்பப் - பெரும்பெயர் விண்ணார் மகிழ்ந்தார் வியலிடந்தா ரேத்தினார் எண்ணா ரவிந்தா ரிகல். (இ - ள்.) வலியவீரக்கழலினையும் தவளசத்திரத்தையுமுடைய வேந்தற்குச் சிவந்த வாயினையும் பெரிய கண்ணினையுமுடைய மைந்தன் பிறத்தலாற் பெரிய நாமத்தினையுடைய தேவர்கள் மகிழ்ந்தார்; அகன்ற பூமியிலுள்ளார் வாழ்த்தினார்; பகைவர் மாறுபாடொழிந்தார் எ-று. (23) |