புரவலன் மகிழ்தூங்க இரவலன் கடைக்கூடின்று. (இ - ள்.) உபகாரி இன்பத்திலே அசைய, இரப்பாளன் போவானாக ஒருப்பட்டது எ-று. (வ - று.) வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர் நல்கிய பின்னு நனிநீடப் - பல்போர் விலங்குங் கடற்றானை வேற்றார் முனைபோற் கலங்கு மளித்தென் கடும்பு. (இ - ள்.) பகையை வெல்லும் குதிரைபூண்ட விளங்குமணியினையுடைய திண்ணிய பொற்றேரைக் கொடுத்தபின்னும் விடைதாழ்ப்ப, பல்பூசலினையும் விலக்கும் கடல்போன்ற சேனையினையுடைய பகைவர் தேசம்போலத் துளங்கா நின்றது; அளிக்கத்தக்கது என்னுடைய சுற்றம் எ-று. (25) |