215. ஆள்வினை வேள்வி
வினைமுற்றிய கனைகழலோன்
மனைவேள்வி மலிவுரைத்தன்று

(இ - ள்.) கைத்தொழில் முடிவுபெற்ற செறிந்த கழலினையுடையோன் இல்லறத்தினுடைய நிறைவைச் சொல்லியது எ-று.

(வ - று.)
நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில்
ஒன்ற வுயிர்களிப்ப வோம்பலால்- வென்றமருள்
வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும்
ஆள்வினை வேள்வி யவன்.

(இ - ள்.) நிலைநின்ற கீர்த்தியோடு நெடுங்காலம் வாழ்க இந்த உலகிடத்து,ஒன்றுபட உயிர்க்கு மகிழ்ச்சிபெறக் காத்தலால்; பகைவரை வென்று பூசலுள் வாட்போரை முடித்து வருக விருந்தினரென்று சொல்லும், முயற்சியாற் செய்யும் புண்ணியத்தையுடைய வேந்தன் எ-று.

(27)