217. கூத்தராற்றுப்படை
ஏத்திச்சென்ற விரவலன்
கூத்தரை யாற்றுப்படுத்தன்று.

(இ - ள்.) தலைவனைக் கண்டு துதித்துமீண்ட இரப்பாளன் கூத்தாடுமவரை வழியிலே செலுத்தியது எ-று.

(வ - று.)
கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின்
தலைவ தவிராது சேறி-சிலைகுலாம்.
காரினை வென்ற கவிகையான் கைவளம்
வாரினை கொண்டு வரற்கு.

(இ - ள்.) கொல்லுஞ்சிலைபோன்ற புருவத்தினையுடைய வஞ்சிக்கொம்பன்ன விறலியர் தம் நிருத்தத்திற்குத் தலைவனே,ஒழியாது போவாயாக; இந்திரதனு வளையும் மழையை வென்ற தியாகத்தினையுடையான் கைவழங்குஞ் செல்வத்தைத் தொகுத்துக்கொண்டு வரற்கு எ-று.

(29)