219. விறலியாற்றுப்படை
திறல்வேந்தன் புகழ்பாடும்
விறலியை யாற்றுப்படுத்தன்று.

(இ - ள்.) வெற்றிமன்னன் கீர்த்தியைச்சொல்லும் பாணிச்சியை வழிப்படுத்தது எ-று.

(வ - று.)
1சில்வளைக்கைச் செவ்வாய் விறலி செருப்படையான்
பல்புகழ் பாடிப் படர்தியேல்- நல்லவையோர்
ஏத்த விழையணிந் தின்னே வருதியாற்
2பூத்த கொடிபோற் பொலிந்து.

(இ - ள்.) சில வளைகளாற் சிறந்த கையினையும் சிவந்தவாயினையுமுடைய பாணிச்சி , பூசலிற்சிறந்த சேனையினையுடையான்றன் பல கீர்த்தியையும் வாழ்த்திப் போவாயாயின் ,நல்ல அவையிடத்துள்ளோர் புகழ ஆபரணத்தைப் பூண்டு இப்பொழுதே மீள்வையால் ,மலர்ந்த வல்லியை யொப்பப் பொலிவுபெற்று எ-று.

(31)

1. பதிற். 57, உரை.
2. சீவக.419 : 1; பெருங்.4.11: 47-8.