220. வாயுறை வாழ்த்து
பிற்பயக்கு மெஞ்சொல்லென
முற்படர்ந்த மொழிமிகுத்தன்று.

(இ - ள்.) பின்னே பலிக்கும் எங்கள் வார்த்தையென்று சொல்லி மேம்பட்ட சொல்லைச் சிறப்பித்தது எ-று.

(வ - று.)
எஞ்சொ லெதிர்கொண் டிகழான் வழிநிற்பிற்
குஞ்சர வெல்படையான் கொள்ளானோ-எஞ்சும்
இகலிட னின்றி யெறிமுந்தீர் சூழ்ந்த
அகலிட மங்கை யகத்து.

(இ - ள்.) எம்முடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு எள்ளானாகி முறைமையே நிற்பின் யானையால் நிறைந்த வெல்லுஞ் சேனை மன்னன் கைக்கொள்வன்; ஒழியும் இகல் இடமின்றியே போக அலையுங்கடல் வளைந்த பரந்த பூமியை அங்கையிடத்திலே எ-று.

அங்கையிடத்திலே கொள்ளானோவென்க.

(32)