221. செவியறிவுறூஉ
மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி
அறந்தெரி கோலாற் கறிய வுரைத்தன்று.

(இ - ள்.) மாற்சரியம் கெடுதலில்லாத நின்று நிலைத்த பெரிய எண்ணத்தைத் தருமத்தை ஆராயும் செங்கோலினையுடையாற்கு உணர மொழிந்தது எ-று.

(வ - று.)
1அந்தணர் சான்றோ ரருந்தவத்தார் தம்முன்னோர்
தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டன் முறை.

(இ - ள்.) வேதியர் அமைந்தோர் அரியதவத்தினையுடையோர் தம்முடைய தமையன்மார் தகப்பன் மாதா இப்படியொத்த இவர்க்கு மாலை மன்னனே, முன்னோர்செய்த நெறியேநின்று பின்பு கடலை எல்லையாகவுடைய ஞாலத்து வார்த்தையை நின்றுகேட்குமது வழக்கு எ-று.

(33)

1. தொல் புறத்.சூ.39,இளம்.மேற்.;குறள்432,பரிமேல்.வி.