கயக்கருங் கடற்றானை வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று. (இ - ள்.) பகைவராற் கலக்குதற்கரிய கடல்போலும் சேனையினையும் வலிய யானையினையுமுடையான் வாளைப் புகழ்ந்தது எ-று. (வ - று.) கொங்கவி ழைம்பான் மடவார் வியன்கோயில் மங்கலங் கூற மறங்கனலும்- செங்கோல் நிலந்தரிய செல்லு நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய வேந்திய வாள். (இ - ள்.) தேன்மலரும் சுருள் குரல் அஏகம் துஞ்சுகுழல் கொண்டை என்னும் ஐந்து பகுதியானமைந்த கூந்தலையுடைய பேதையர் அகன்ற மாளிகையிடத்து நன்மையைச் சொல்லும் சினமழலும்; நீதி நிலத்தைத் தருவான் வேண்டி நடக்கும் நிரைத்த குளிர்ந்த மாலையினையுடைய வானவன் வெற்றிவேண்டி உயர்த்த வாள். வியன்கோயிலிற் கொங்கவிழைம்பால் மடவார் நிலந்திரியச் செல்லும் செங்கோலினது மங்கலத்தைக் கூற நிரைதண்டார்ச் சேரன் வலந்தரிய ஏந்திய வாள் மறங்கனலுமெனக் கூட்டுக எ-று. செல்லும் : செலுத்துமென்றுரைப்பாருமுளர். (35) |