225. ஓம்படை
இன்னது செய்த லியல்பென விறைவன்
முன்னின் றறிவன் மொழிதொடர்ந் தன்று.

(இ - ள்.) இன்ன காரியத்தைச் செய்யுமது தன்மையெனச் சொல்லி வேந்தன் முன்னே நின்று புலமை மிக்கவன் அடுத்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
1ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று 2களங்கொண்ட வேல்வேந்தே- சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென்-3றாறகற்றி
ஏழ்கடிந் தின்புற் றிரு.

(இ - ள்.) ஞானத்தாலே4காரியாகாரியங்களைத் தெரிந்து நட்புப்பகை உதாசீனமென்னும் மூன்றினையும் உட்கொண்டு யானை தேர் குதிரை காலாளாலே பூசலை வென்று போர்க்களத்தைக் கைக்கொண்ட வேன் மன்னனே, பெயர்ந்து கரையைப் பொரும் ஆழ்ந்த கடல்சூழ்ந்த குவலயத்து இந்திரியங்களைந்தையும் வென்று ஆறினையும் பெருக்கி ஏழினையும் கடிந்து இனிமையுற்று நெடுங்காலமிருப்பாயாக எ-று.

ஆறு ஏழாவன: "நாடிய நட்புப் பகைசெலவு நல்லிருக்கை, கூடினரைப் பிரித்தல் கூட்டலா-றீடிலா,5வேட்டங் கடுஞ்சொல் மிகுதண்டஞ்சூது பொரு, ளீட்டங்கள்காமமிவை 6யேழு"

ஒன்று-ஆன்மா; இரண்டு-புண்ணிய பாபம்; மூன்று-காமம் வெகுளி மயக்கம், உற்சாகசத்தி பிரபுசத்தி மந்திரசத்தி; நான்கு -சாமதான பேத தண்டம்; ஐந்து-சத்தப் பரிச ரூப ரத கந்தம்; ஆறு-படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்றுமாம்.

(37)

1. நன். சூ. 268, மயிலை விரு. மேற்.
2. பு.வெ. 180:4, குறிப்புரையைப்பார்க்க.
3. ஆறடக்கி
4. காரணகாரியங்களை
5. குறள். 566. பரிமேல். வி. மேற்.
6. ஏழ்