226. புறநிலை வாழ்த்து
வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப
வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று.

(இ - ள்.) நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பரிகரிப்ப நின் வழிவழி மிகுவதாகவெனச் சொல்லி உண்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக்
கடிபடு கொன்றையான் காப்ப - நெடிதுலகிற்
பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற
மாமலைபோன் மன்னுக நீ.

(இ - ள்.) ஒழுங்குவிடும் மூன்று இலைத்தொழிலாற் பொலிந்த சூலத்தினையும் கூற்றம்போன்ற குந்தாலியினையும் நறுநாற்றமிகும் இதழியினையுமுடைய இறைவன் காப்ப நெடுங்காலம் நிலவலயத்துப் பொலிவு மிக்க நாவலந்தீவிடத்து அண்டமுருவிப் போய்நின்ற மாமேருவென்னும் பெரிய மலைபோல நின்று நிலைப்பாயாக எ-று.

நாவலந் தீவிடத்து மன்னுவாயாகவெனக் கூட்டுக.

பூமியில் ஒருகூறு நாவலந்தீவு.

(38)