இருங்கண்வானத் திமையோருழைப் பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று. (இ - ள்.) பெரிய இடத்தினையுடைய வானத்துத் தேவர்களிடை மிக்க அறிவாளனை நெறியிலே செலுத்தியது எ-று. (வ - று.) 1வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட் கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க அருளீயு மாழி யவன். (இ - ள்.) நறுநாற்றத்தினை யுடைத்தாய் ஒலிக்கும் அருவியாற் பொலிந்த திருவேங்கடத்திடத்துப்போவையாயின், முறைமைகொண்ட வேடத்தையுடையோய்,நீயும், இந்திரியங்கட்கு மயக்கங்கொடுக்கும் காசினியில் துயரெல்லாமொழிய அருளை வழங்கும், சக்கரத்தினையுடையவன் எ-று. நீயும்செல்லின் அருளீயுமெனவே, எனக்கு நல்கினானென்பதாம்;2"உலவா வூக்கமொ டுன்னியது முடிக்கும், புலவராற்றுப்படை புத்தேட்கு முரித்தே" என்பதனானறிக. (42)
1. தொல். புறத் . சூ.21, இளம் .மேற். 2. பன்னிருபாட்டியல், 320. |