234. பெருந்திணை
பெய்கழற் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து
மல்கிருட் செல்வோள் வகையுரைத் தன்று.

(இ - ள்.) இட்ட வீரக்கழலினையும் மிக்க தலைமையினையுமுடையவன் விரும்பாத புல்லுதலை வேட்டு மிக்க இருட்காலத்துப் போமவளது தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
வயங்குளைமான் றென்னன் வரையகலந் தோய
இயங்கா விருளிடைச் செல்வேன் -மயங்காமை
ஓடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னிற்றால்
1மாட மறுகின் மழை.

(இ - ள்.) விளங்கும் தலையாட்டத்தால் அழகுபெற்ற குதிரையினை யுடைய பாண்டியனது வரைபோன்ற மார்பைத் தழுவ ஒருவரும் நடக்கத்தகாத செறிந்த இருளிடத்துப் போவேன் மருளாதபடி, செவ்வரி கருவரி பரந்த கண்ணினையுடையாய், உறைநீக்கின வாள்போல மின்னிற்று, மாளிகையான் மிக்க தெருவிலே மேகம் எ-று.

ஆல்: அசை.

(46)

1. முருகு. 71; பரி. 20;25.