235. புலவிபொருளாகத்தோன்றிய பாடாண்பாட்டு
வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று.

(இ - ள்.) விற்போன்ற நெற்றியினையுடையாள் வீரன்றன் அகலத் திடத்தைத்தழுவேம் யாமென்று ஊடிச் சொல்லியது எ-று.

(வ - று.)
1மலைபடு சாந்த மலர்மார்ப யாநின்
பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கினிது.

(இ - ள்.) மலையகத்துண்டான சந்தனத்தையுடைய அகன்ற மார்பனே, யாங்கள் நின்னுடைய பரத்தையர் பலரும் தோயும் சம்பத்தைக் தோயேம்; பொழுதுபுலரும் விடியற்காலத்தே சுரும்பினங்கள் புணர்ந்து நுகரும் பழனஞ் சூழ்ந்த செல்வப்பதியிலேகண்டேம்; நோக்குதற்கு இனிதாயிருந்தது எ-று.

மலர் மார்பனே, பரத்தையர் பலர்படியும் நின்செல்வத்தை வயல் சூழ் திருநகரிற் கண்டேம்; இனி யாங்கள் தோயேமெனக் கூட்டுக.

பாடாண்டிணையிற் கைக்கிளைவகையும் பெருந்திணைவகையும் புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டும், பாட்டுடைத்தலைமகனையே கிளவித் தலைமகனாகக் கூறினாராதலின், 23"உருவி யாகிய வொரு பெருங்கிழவனை , 4 அருவி கூறுத லானந் தம்மே " என்னும் விதிதகாது.

(47)

1. தொல். புறத். சூ. 22, இளம், மேற்.
2. யா. வி. சூ 65, மேற்.
3. உருபி 4. அருபி