இமையா நாட்டத் திலங்கிழை மகளிர் அமையாக் காத லமரரை மகிழ்ந்தன்று. (இ - ள்.) இமையாத கண்ணினையும் ஒளிவிடும் ஆபரணத்தினையு முடைய தெய்வமகளிர் ஆராத அன்புடைய கடவுளரை விரும்பியது எ-று. (வ - று.) 1நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமேல் ஒல்கெனி னுச்சியா ணோமென்னும்-மல்கிருள் ஆட லமர்ந்தாற் கரிதா லுமையாளை ஊட லுணர்த்துவதோ ராறு. (இ - ள்.) அருள்செய்கெனச் சொல்லின், நும்முடைய நாவின்மேலிருக்கும் சொன்மகள் நோவுபடுமென்று சொல்லும்; சிவந்த பாதத்திலே வணங்குவேனென்று சொல்லின், நும்முடைய திருமுடிமேலிருக்கும் கங்காதேவி நோவுபடுமென்று சொல்லும்; மிக்க இருளிடத்துக் திருக்கூத்தை மேவின இறைவனுக்கு அருமையுடைத்தாயிருந்தது, உமாதேவியை வழக்காட்டினைத் தீர்ப்பதொரு நெறி எ-று. (48)
1. தொல். புறத். சூ 23. இளம். மேற். |