ஆற்றா ரொழியக் கூற்றெனச் சினைஇப் போற்றார் போகிய நெறியடை யேகின்று. (இ - ள்.) செருவினைப் பொறாதார் ஊரிலே நிற்கக் காலனை யொப்பக் கோபித்துப் பகைவர் போன வழியிடத்தே சென்றது எ-று. (வ - று.) சங்குங் கருங்கோடுந் தாழ்பீலிப் பல்லியமும் எங்கும் பறையோ டெழுந்தார்ப்ப - வெங்கல் அழற்சுரந் தாம்படர்ந்தா ரான்சுவட்டின் மேலே நிழற்கதிர்வேன் மின்ன நிரைத்து. (இ - ள்.) சங்கும் கரிய வீரக்கொம்பும் தாழ்ந்த பீலியையுடைய சில விசேட வாச்சியங்களும் பறையோடு எங்கும் எழுந்து ஆரவாரிப்ப வெவ்விய கல்லினையுடைய அழல்பரந்த காட்டிலே தாம் போயினார், நிரைபோன அடிப்பாடே, நிழல்விடும் சுடர்வேல் ஒளிவிட நிரைத்து எ - று. (3) |