விறற்படை மறவர் வெஞ்சமங் காணின் மறப்போர்ச் செம்பியன் மலைப்பூ வுரைத்தன்று. (இ - ள்.) வெற்றியினையுடைய சேனை வீரர்தம் வெய்ய பூசலைக்காணிற் கொடுவினைப் பூசலைச் செய்யவல்ல சோழன் புனையும் மலரினைச் சொல்லியது எ-று. (வ - று.) 1கொல்களி றூர்வர் கொலிமலை வாண்மறவர் வெல்கழல் வீக்குவர் வேலிளையர்- மல்கும் கலங்க வொலிபுன்ற் காவிரி நாடன் அலங்க லமரழுவத் தார். (இ - ள்.) கொல்லும் யானையைச் செலுத்துவர் கொலைத்தொழிலின் மிக்க வாள்வீரர்; வெல்லும் வீரக்கழலினைக் கட்டுவர் வேலினையுடைய இளையவர்; மிகும் செங்கலங்கலையுடைத்தாய் முழங்கும் புனலினையுடைய பொன்னிநாடன் மாலை, பூசல் நடுவு ஆத்தி எ-று. (3)
1. தொல்.புறத்.சூ.5,இளம்.மேற். |