243. உன்னநிலை
துன்னருஞ் சிறப்பிற் றொடுகழன் மன்னனை
உன்னஞ் சேர்த்தி யுறுபுகழ் மலிந்தன்று.

(இ - ள்.) கிட்டுதற்கரிய நன்மையினையும் கட்டுங்கழலினையுமுடைய வேந்தனை நிமித்தம் பார்க்கும் மரத்தொடு கூட்டி மிகுபுகழைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரும்
ஈடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின்
கோடெலா முன்னங் குழை.

(இ - ள்.) கிட்டுதற்கரிய சேனையினையும் கட்டும் வீரக்கழலினையுமுடைய நம் வேந்தன்றன் வலியோடு மாறுபட்டு முன்னேவந்து பணியாதார் மாறுபாடு இனிக்கெட, எதிர்ந்த வேந்தரும் இவன்வலியெலாம் தடுத்து மாறுபாடொழிந்தார்; நீயும் நின்னுடைய பணையெல்லாம் 2உன்ன மரமே, தளிர்ப்பாயாக எ-று.

(4)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.
2. தொல். புறத். சூ. 5; பதற். 40 : 17-8,61:6; புறநா.
3: 23.