245. இதுவுமது
ஏந்துபுக ழுலகி னிளமை நோக்கான்
வேந்து நிற்றலு மேழக நிலையே

(இ - ள்.) உயருங் கீர்த்தியையுடைய ஞாலத்தின் இளமையைப் பாராதே அரசன் பூமிகாவல் பூண்டுநிற்பினும் ஏழகநிலையேயாம் எ-று.

(வ - று.)
வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன்
பூண்டான் பொழில்காவ லென்றுரையாம் - ஈண்டு
மருளன்மின் 1கோள்கருது மால்வரை யாளிக்
குருளையுங் கொல்களிற்றின் கோடு .

(இ - ள்.) பகைவர் பெரியர் , வென்றிவேலினையுடையோன்றான் இளமைப்பருவத்தோன், பூமிகாவலை மேற்கொண்டானென்று சொல்லாம்; இவ்விடத்து மயங்காதே கொண்மின்; கொள்கையைநினையும் பெரியமலையிடத்து யாளியின் குட்டியும் கொல்லும் யானையின் கொம்பை எ-று.

(6)

1. பொருந. 139-42; அகநா. 381 :1-3; சீவக. 2554.