246. கழனிலை
அடுமுர ணகற்று மாளுகு ஞாட்பிற்
கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று.

(இ - ள்.) கொல்லும் மாறுபாட்டைப் பெருக்கும் வீரர்படும் பூசலிற் கடிய முரணையுடைய வீரன் கழலைப் புனைந்தது எ-று.

(வ - று.)
1வாளமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் - காளை
கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றால்
பொலங்கழல் கான்மேற் புனைவு .

(இ - ள்.) வாட்பூசலில் எதிர்நின்று விலக்கிச் சுவர்க்கத்திடத்துச் செல்வார் யாவர்கொல்லோ ? உறவல்லாதாரைப் போக்கிய சதங்கை அமைந்த தாளினையுடைய இளமைப்பருவத்து வேந்தன் , மிக்க நெருப்பின் வாயிலே நஞ்சைத் தீற்றிய தன்மைத்து , பொன்னாற்செய்த வீரக் கழலைச் சேவடியின்மீது அணியுமது எ-று.

(7)

1. தொல். புறத். சூ. 5. இளம். மேற்.