248. கற்கோணிலை
மண்மருளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கற்கொண்டன்று.

(இ - ள்.) பூமி மயங்கப் பறையொலிப்பச் சுவர்க்கத்திலே பொருந்தினவனுக்குக் கல்லினைக் கொண்டது எ-று.

(வ - று.)
1பூவொடு நீர்தூவிப் பொங்க 2விரைபுகைத்து
நாவுடை நன்மணி நன்கியம்ப - மேவார்
அழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல் .

(இ - ள்.) மலருடனே புனலைச் சிந்தி எழும்படியாக நறுநாற்ற முடையனவற்றைப் புகையப்பண்ணி நாவினாற் பொலிந்த அழகியமணி நன்றாக இசைப்ப, பொருந்தாதார் எரியுஞ்சினத்தைக் காலுவித்துப் பட்டவனுக்குத் தக்கது இதுவென்று துதித்துக் கழல்வீரர் கைக்கொண்டார் கல்லினை எ-று.

(9)

1. தொல். புறத். சூ. 5, இளம். மேற்.
2. சிலப். 5 : 14.