வண்டுசூழ் தாமம் புடையே யலம்வரக் கண்டு கொண்ட கன்னீர்ப் படுத்தன்று. (இ - ள்.) சுரும்பு சூழுமாலை பக்கத்தில் அசைந்துவரப் பார்த்துக் கைக்கொண்ட கல்லினைப் புனலிலே யிட்டது எ-று. (வ - று.) 1காடு கனலக் கனலோன் சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாட்டிக் கயத்தகத் துய்த்திட்டார் கல் . (இ - ள்.) கானம் அழல ஆதித்தன் கோபத்தைப் பொழிதலாலே பொருந்தின வெப்பம் தண்ணென ஏத்தி நன்மையுண்டாகச் சுத்தி பண்ணிப் பின் நறுநாற்றமுடையனவற்றைக் கொண்டு மஞ்சனமாட்டி வாவியிடத்திலே செலுத்தி அழுத்தினார் கல்லினை எ-று. (10)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற். |