250. இதுவுமது
ஓங்கியகல் லுய்த்தொழுக்கல்
ஆங்கெண்ணினு மத்துறையாகும்.

(இ - ள்.) உயர்ந்த கல்லினைச் செலுத்தி நிரைத்தலை அவ்விடத்துக் கருதினும் முன்பு சொன்ன துறையேயாம் எ-று.

(வ - று.)
கணனார்ந் துவப்பக் கடுங்கண் மறவர்
பிணனார்ந்து பேய்வழங்கு ஞாட்பின் - நிணனார்
விழுக்கினால் வேய்ந்த விறல்வேலோர் கல்லை
ஒழுக்கினா ரொன்றொருவர் முன் .

(இ - ள்.) தமது திரள் நிறைந்து மனமகிழத் தறுகண்வீரர் பிணத்தைத் தின்று கழுதுலாம் பூசலிடத்து நிணம் நிறையும் நெஞ்சில் தசையால் மூடிய வென்றிவேலோர் செய்த செய்தொழில்தெரித்த கற்களை நிரைத்தார் , ஒருவர்முன் ஒன்றாக எ-று.

ஒருவரென்பது வினைதோறுங் கல் நடுவிக்கும் தலைவரை; ஒன்றொருவர் முன் ஒருவரொருவர் முன்னாக என்று கொள்ளின், 1"ஒன்றொருவரின் முன்னந் தழை விழைதக்கன கொய்தும் " என்றது போலும்.

(11)

1. இறை. சூ. 2, உரை மேற்.