256. தபுதாரநிலை
புனையிழை யிழந்தபிற் புலம்பொடு வைகி
மனையகத் துறையு மைந்தனிலை யுரைத்தன்று.

(இ - ள்.) அணிந்த ஆபரணத்தினையுடையாளை இழந்தபின் தனிமையுடனே தங்கி இல்லிடத்து அவதரிக்கும் ஆண்மகன் முறைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த
மைந்தன் குருசின் மழைவள்ளல்-எந்தை
1தவுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடா யொழிகென் செவி.

(இ - ள்.) பச்சென்ற வளையினையுடையாள் சுவர்க்கத்தைப்பொருந்த வருத்தமுற்ற ஆண்மகன்,தலைவன், மழைபோலக் கொடுக்கும் உபகாரி,என்னுடைய சாமி மனையாளை இழந்தழுந்தின தனியான நிலைமையைக் கேளாத செவிடாய்ப் போக, என் செவி எ-று.

(3)

1. தபுதாரத்