1குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக் கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று. (இ - ள்.) குருந்தப்பூ மலரும் மாலையினையுடைய கணவன் இறந்தானாகக் கரிய பெரிய கண்ணினையுடையாள் வைதவியமெய்தியவாற்றைச் சொல்லியது எ-று. (வ - று.) கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா தலந்தினையு மவ்வளைத் தோளி-உலந்தவன் தாரொடு பொங்கி நிலனிசைஇத் தான்மிசையும் காரடகின் மேல்வைத்தாள் கை. (இ - ள்.) தன்னுடனே கூடின கொழுநனைக் கூற்றுவனொளிப்பத்தான் இறந்து படாது நொந்துவருந்தும் அழகிய வளைத்தோளினையுடையாள் ,தன்னைவிட்டு இறந்தவன் மாலையோடு கோபித்து வெறுநிலத்திலே வதிந்து நான் அருந்தும் கரிய அடகின்மேலே கையை வைத்தாள் எ-று. (4)
1. புறநா.248,உரை,மேற். |