258. தலைப்பெயனிலை
இன்கதிர் முறுவற்பாலக னென்னும்
தன்கட னிறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று.

(இ - ள்.) இனிய ஒளிநகையினையுடைய பிள்ளையென்னும் தான் கொடுக்கக் கடவதனைக் கொடுத்த மாதர் இறந்த முறைமையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
1இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே
தடம்பெருங்கட் பாலகனென்னும்-கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்.

(இ - ள்.) அகன்ற பூமியினது தன்மையோ கொடியதொன்றே! மிகப்பெரிய கண்ணினையுடைய பிள்ளையென்று சொல்லும் கொடுக்கக் கடவதனைக் கொடுத்து முட்போலக் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள்,மாறுபாடு கெடாத வளப்பம் மிக்க எயிற்றினையுடைய கூற்றுவன் வாயிலே எ-று.

(5)

1. தொல். புறத். சூ. 19, இளம், மேற்.