261. மாலைநிலை
கதிர்வேற் கணவனொடு கனையெரி முழுக
மதியேர் நுதலி மாலைநின் றன்று.

(இ - ள்.) ஒளியால் மிக்க வேலினையுடைய கொழுநனொடு செறிந்த நெருப்பிலே புகுவான் வேண்டிப் பிறையை்யொத்த நெற்றியினையுடையாள் மாலைக்காலத்திலே நின்றது எ-று.

(வ - று.)
சோலை மயிலன்னா டன்கணவன் சொல்லியசொல்
மாலை நினையா மனங்கடைஇக் - காலைப்
புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்
அகையழ லீமத் தகத்து.

(இ - ள்.) பொழின்மயிலை அனையாள், தன் கணவன் பகர்ந்த வார்த்தையை மாலைக்காலத்திலே நினைத்து மனத்தை முடுக்கிக் காலைப் பொழுதிலே மூளும் தழல் போன்ற வேலினையுடையான்தன் துணையாகி நின்றாள், கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பொருந்திய சுடுகாட்டகத்து எ-று.

ஈமத்தகத்துப் புணர்ப்பாகி நின்றாளென்க.

(8)