266. ஆனந்தப்பையுள்
1விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று.

(இ - ள்.) இடும்பை மிக மூங்கில்போன்ற தோளினையுடையாள் கணவனிறப்ப மெலிந்து வருந்தியது எ-று.

(வ - று.)
புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை
திகழொளிய மாவிசும்பு சேர - இகழ்வார்முன்
கண்டே கழிகாத லில்லையாற் கைசோர்ந்தும்
உண்டே யளித்தெ னுயிர்.

(இ - ள்.) கீர்த்தி பாரிலே நிற்பப் பொலிந்த வீரக்கழலினையுடைய தலைவன் இலங்கும் ஒளியினையுடைய சுவர்க்கத்தைப் பொருந்த எள்ளுவாரை முன்னே கண்டுவைத்து இறந்துபடும் அன்பின்றால், செயலற்றும் உண்டாயிருந்தது, அளியினையுடைத்து, என்னுயிர் எ-று.

(13)

1. புறநா. 228, 246, உரை, மேற்