பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று. (இ - ள்.) எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம்பொருளின்பத்தை அறியச் சொல்லியது எ-று. (வ - று.) ஆற்றி னுணரி னருளறமா மாற்றார்க்குப் போற்றார் வழங்கிற் பொருள்பொருளாம்-மாற்றிப் புகலா தொழுகும் புரிவளையார் மென்றோள் அகலா தளித்தொழுக லன்பு. (இ - ள்.) நெறியான் அறியின், அருள் தன்மாகும்; வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பிற் பொருள் பொருளாம்; மாறி விரும்பாது ஒரு நெறிப்பட நடக்கும் முறுக்குவளையினையுடையோர்தம் மெல்லிய தோளை நீங்காதே அளித்து நடக்குமது காதலாம் எ-று. (1) |