270. பெருங்காஞ்சி
மலையோங்கிய மாநிலத்து
நிலையாமை நெறியுரைத்தன்று.

(இ - ள்.) வரையுயர்ந்த பெரிய குவலயத்து நிலையில்லா நெறியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
மாயா நிதிய மனைச்செறீஇ-ஈயா
1திறுகப் பொதியன்மி னின்றொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று.

(இ - ள்.) ஆராயாதே உணர்ச்சி மறந்து அலம்வந்து பூமியிடத்துக் கெடாத பெரும்பொருளை இல்லிலே சேர்த்திப் பிறர்க்கு வழங்காதே சிக்கெனக் கட்டிவையாதொழிமின்; இன்றாதல் நாளையாதல் நும்மை அணுகவரும் கூற்றம் எ-று.

அதனால், ஈயாது இறுகப் பொதியன்மினென்க.

ஒடுவும் அரோவும் அசைகள்.

(2)

1. நாலடி.4,36.