274. காடு வாழ்த்து
பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் 1நெய்தல்
கல்லென வொலிக்குங் காடுவாழ்த் தின்று.

(இ - ள்.) பலர்க்கும் இசைக்கும் பெரிதாக ஒலிக்கும் சாப்பறை அனுகரணசத்தமுடைத்தாகக் கறங்கும் சுடுகாட்டை வாழ்த்தியது எ-று.

(வ - று.)
2முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகில்
தன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின்
அழுதார்க ணீர்விடுத்த வாறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்குங் காடு.

(இ - ள்.) முன்னே தான் முதுகு காணும், இவ்வுலகத்தினை; இவ்வுலகிடத்துத் தன் முதுகைக் கண்டு வென்றறிவார்தாம் ஒருவருமில்லை; காதலாலே அழுதவர் கண்ணீருகுத்த ஆற்றிலே புக்கு ஆடிக் கோட்டானும் பேயும் நிறைந்து இராப்பொழுதின்கன் உலாவும் சுடுகாடு எ-று.

"குறியத னிறுதிச் சினைகெட வுகரம், அறிய வருதல் செய்யுளுளுரித்தே" (தொல்.உயிர்மயங்கு.சூ.32) என்பதனால் உகரம் கெட்டது.

(6)

1. நன்.சூ.451,மயிலை.மேற்.
2. மூப்புவந்தெய்தி