277. தேர்முல்லை
உருத்தெழு மன்ன ரொன்னார் தந்நிலை
திருத்திய காதலர் தேர்வர வுரைத்தன்று.

(இ - ள்.) கோபித்தெழும் அரசராகிய பகைவர் தம்முடைய நிலைமையை உறவாக்கி மீண்ட அன்பர்தம் தேர் வந்தபடியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையுள்
ஊர்ந்துநங் கேள்வ ருழைவந்தார் - சார்ந்து
பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளும்
திரிகோட்ட மாவிரியத் தேர்.

(இ - ள்.) ஒன்னார் தம் பகையையொழிந்து பணிந்து திறைகொடுப்பப் பகைமுனையுட் செலுத்தி நம்முடைய கொழுநர் பக்கத்தே வந்தார்; ஒன்றோடொன்று கூடிச்செலவு வளைவின்றிச் செங்கோலறுகை அருந்திப் பாயும் வளைந்த கொம்பினையுடைய கலை கெட்டோடத் தேரினை எ-று.

தேர் ஊர்ந்து நங்கேள்வர் உழைவந்தாரென்க.

(3)