279. இல்லாண் முல்லை
கழுமிய காதற் கணவனைப் பழிச்சி
இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று

(இ - ள்.) பொருந்திய காதற்கணவனை வாழ்த்திப் பலரும் இசைக்கும் அனுகரணத்தினையுடைய கீர்த்தியாற் சிறந்த இல்லின்மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
1ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்தம்
இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப்
புற்செல்வம் பூவா புகழ்.

(இ - ள்.) அனுகரண சத்தத்தான் மிக்க கடலை வேலியாகவுடைய ஞாலத்திடத்துக் கொழுநன் பாதத்தையேத்திச் செயற்படும் வகையால் விருந்தினரைப் பாதுகாத்து நடக்கும் தம்முடைய இல்லிடத்துச் செல்வமல்லது வேண்டினோர்க்குக் கொடுக்கமாட்டாப் புல்லிய சம்பத்து, இசை பூக்கமாட்டா எ-று.

(5)

1. குறள், 33.